படம் 71

1.1  அஷ்ரப்

நீயும்…உனது பொழுதுகளும்…

பதினாறு புள்ளி கோலமிட

வாசல் தெளிக்கும் போதே

உன் பொழுது துவங்குகிறது

நித்தமும்…

கோடையோ வாடையோ

பனியின் குளிரோ

நீ  வைகறை எழுவதைத்

தடுப்பதில்லை…

உள்ளியும் மிளகாயும்

துணையிருக்க

பதினோரு மணி

நீராகாரம் உன் பொழுதுகளை

நத்தை போல் நகர்த்துகிறது…

அனைவருக்கும் பிடித்தவாறே

சமைக்க

அஞ்சறைப் பெட்டி

‘உனக்கு அடிமை’ எனத்

தவமிருக்கிறது.

குட்டி ஈன்ற ஆட்டின்

அரையில் வாஞ்சையுடன்

இடுகிறாய் மஞ்சள் பூச்சை…

பஞ்சாரத்தைத் திறந்தபின்

ஓடிக் களிக்கும் குஞ்சுகளைப்

பார்த்தும்

உன் விரலைக் கொத்தும்

கோழியைக் கண்டும்

புன்னகைக்கிறாய் அர்த்தத்துடன்…

கன்றை விடுவித்து

மடி கனத்த ஆவின்

துயர்த் தீர்க்கிறாய்

தாய்மையின் கருணையுடன்…

கிணற்றருகில்

அசைபோடும் செவலையை

அதட்டி எழுப்புகிறாய்

சாணத்தை நகர்த்தியபடி…

அந்தி இருள் கவிகிறது

நீ அம்மியிலிருந்து 

மீன்கறிக்கான சாந்தை

வழித்து எடுக்கையில்…

அனைவருக்கும் செய்யும்

சேவகத்தில் கரைகிறது

சுமத்தப்பட்ட கடமைகளுடன்

உன் பொழுதுகள்…

சில சமயம்

திண்ணையில்

தலைசாய்க்கும் உனக்கு

முந்தானையால்

சாமரம் வீசுகிறது

நீ வளர்த்த வேம்பைக்

கடக்கும் தென்றல்!!

1.2  சாவித்திரி

உயிரில் கலந்த காதலியே என் இன்பம் எங்கு உள்ளது அறம் வாய்ந்த என் தாய் கைப்பக்குவத்தில் எனக்கு சோர்வைக்கும் வேளையில் அம்மா என்று என் வீட்டு கன்றுக்குட்டி கூப்பிடும் அடுத்து கோழிக்குஞ்சு ஓடி படபடக்கும் அம்மா என்று நானும் அழைப்பேன் ஓடிவந்து ஒரு கை ரசமும் பருப்பும் எடுத்து வைத்தாள் தாத்தா அம்மா தண்ணீர் வந்துட்டேன் மாமா உயிருடன் கலந்து பொறுப்பு தன் தலையில் தானே சுமந்தபடி எங்கள் குடும்ப குலதெய்வம் படையல் போட்டு காத்திருந்தும் இன்னும் சாப்பிட நேரமில்லை இப்பொழுது உன் வசம் நான் தாயாகவே உன்னை நேசிக்கிறேன் தாயாக வருவாயா

1.3  தசரதன்

ஆத்தா வைச்ச குழம்பு….!                                  

அஞ்சு ஊரு மணக்கும்…..!                                   

ஆத்தா கையின் வாசம்…..!                               

அம்மியில அரைச்ச நேசம்…..!                         

எல்லா பொருளும் சேத்தரைச்சு….!                  

இனிப்பா மசாலை ஆக்கி…..!                           

நீ வைச்ச கறிக் கொழம்பு……!                          

நெனைச்சா நித்தம் நாவூரும்…..!                     

ஆத்தா ஒன் வாசமெல்லாம்……!                         

அன்னைக்கு ஊரெல்லாம் பேசும்…..!

1.4  நா. துரைக்குமார்

வயக்காடு வரப்புக்காடு

வரலயான்னு கேட்குது புள்ள

வசியம் தான் வச்சியோ நீ

மனம் இங்கேயே மருகுதே புள்ள!

கூறுகெட்ட சிறுக்கியோனு

குறும்புப் பேச்சு வேண்டாமய்யா! 

கொதிக்கும் மீன் குழம்பு மணம் இழுப்பதினால் 

வயல் போகத்தான் மனம் மறுக்குதோய்யா…..!!

@@@

ஆத்தா கையால்

அரைத்து விட்ட  சாம்பாருக்கு

அஞ்சாறு மிளகாய் 

அளவோடு மல்லியும் புளியும்

அள்ளித் தெளித்த தண்ணீரில் அரைபட்டுப் போகும்

அடுப்பங்கரையின்

அம்மியில் இம்மிபிசகாமல்!…

இடுப்பளவு மேடையில்

இழுத்தரைக்கும் என் பாட்டிக்கு

இரத்தக் கொதிப்போ சர்க்கரையோ இன்றுவரை வந்ததில்லை!..

இனிக்கும் தேனாக குழம்பு!

இருந்தாள் ஆத்தா மருந்தாகவே!…

இந்தத் தலைமுறைக்குத்

இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை!…

1.5  தேன்மொழி

வெறும் துவயலுக்கு

உப்பு புளியோடு

அன்பும் சேரும் அம்மியில்

அம்மா கை பட்டாலே

அனுதினமும் விருந்து தான்!!

@@@

1.6  பிரபு பாலா

#துவையல் யுத்தம்#

அசையாத அம்மிக்கல் மேடையில்,

பாட்டி நடத்திய மல்யுத்தப் போட்டி…

குழவியுடன் மோதும் எல்லோரும் தயார்!

முதலில் பொட்டுக்கடலை,

உடனே தவிடு பொடியானது!

அடுத்ததாகத் தேங்காய் கீற்று,

நல்ல முயற்சி – ஆனால் நாசமானது!

அடுத்தடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், புளி மற்றும் உப்பு!

அடிபட்டு மயங்கி விழுகையில்,

தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியவில்லை!

முடிந்தது யுத்தம்!

வென்றது குழவி!

தோற்றவர்களை வழித்தெடுக்கக்

கிடைத்தது சுவையான துவையல்!

Leave a comment