படம் 68

1.1  தவமணிகிருஷ்

பகிர்ந்துண்ணும் பண்பை

பாருக்கே  கற்பிக்கும் இவர்கள்

குழந்தைகள் அல்ல

குட்டித் தெய்வங்கள்.

1.2  பிரபு பாலா

# ஆளுக்கு ஒரு பிடி சோறு #

சேவல் கூவப் புறப்பட்டு

சாராயக் கடைக்குப் போய்விடுவான்

ஐந்து பிள்ளையைப் பெற்று

ஆண்மையை நிரூபித்துக் காட்டிய

பொறுப்பில்லாத அப்பன்.

கணவனின் சுகம் மறுக்காது

இன்னொரு புது வரவை

வயிற்றில் சுமந்து கொண்டு

மச்சு வீட்டு வேலைக்குப்

போய்விடுவாள் அம்மா.

பத்துப் பாத்திரம் கழுவி,

துணி துவைத்து, உலர்த்தி பின்பு

இஸ்திரி போட்டு மடித்து

வைக்க, மாலை மூன்றெனக் காட்டும்

அந்த வீட்டுக் கடிகாரம்.

வீட்டுக்காரர்கள் உண்டது போக

மிச்சம் இருந்தால், பொட்டலம்

கட்டிக்கொண்டு பிள்ளைகள்

பசி போக்க ஓட்டமும் நடையுமாய்

வருவாள்.

ஏனோ இன்று அவள் இன்னும்

வரவில்லை….

பசியால் காதுகள் அடைக்க

உடன் பிறப்புகள் வயிற்றைப் பிடிக்க

முதன் முதலாகக் கையேந்தினான்

புதிய பிச்சைக்காரனாய் ஐந்து வயது

சிறுவன்.

வறுமையின் கொடுமையைக் கடிந்து

தலைவர்களைக் குறை கூறியபடி

கருணையுள்ள யாரோ ஒருவரின்

உதவியால் இன்று கிடைத்துவிட்டது

ஐவருக்கும் ஆளுக்கு ஒரு பிடி சோறு !

@@@

1.3  கார்த்திக் சிதம்பரம்

பற்றாக்குறையை பகிர்ந்து உண்டால்

பாருக்கே

தொற்றாது  குறை !

1.4  ஜோசப் சேவியர்

பசி தீர்க்கும் தருணங்களிலெல்லாம்

சடுதியில் அம்மாவாகி விடும் வரம்

இந்த அக்காக்களுக்கு மட்டும்

எளிதில் எப்படித்தான் வாய்க்கிறதோ !

1.5  தேன்மொழி

பசித்து புசிக்கும் நேரங்களில் 

பசி அடங்காவிடிலும்

அடக்கத்தான் வேண்டியதாகிறது

நாவில் ஒட்டிய ருசியை

மற்றவரும் புசிப்பதற்காக!

1.6  துரைக்குமார்

பசித்தபோதெல்லாம்

பங்கிட்டு உண்ணும்

மெய்ஞானப் பசியோ?…

நல்லுணவு கொடுத்தென்னை

உள்ளுணர்வைத்  தட்டியெளுப்பும்

தங்கத் தட்டில் இருப்பது.

தமிழன்னை தானோ?! 

செவி வழி கேட்டு

அள்ளிக் கொடுக்கும்

கருணை உள்ளம்

படைத்தோர் எல்லோரையும்

பார் போற்றும் பார்!…

1.7  வெங்கடாசலபதி

இவ் ஐவரும்

ஐநாவுக்கு

 அதிபர்களானால்

சோமாலிய நாடும்

சொர்க்க பூமியாகும்.

பசி பட்டினி எல்லாம் பாரினிலே இருக்காது

அன்பென்னும்

ஆயுதங்குவித்து

அனுகுண்டை

அடியோடுஅழிப்பர்.

1.8  கனிமொழி

சேலை கட்டிய

சின்னஞ்சிறு தாயவள்

பசியறிந்து பகிர்ந்து

கொடுத்தாள் சமமாக..

Leave a comment