103 வது கவிமாலையில் பல கவிஞர்கள் கலந்துகொண்ட புல்லாங்குழல் தலைப்பிற்கான போட்டிக்கவிதையில் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கவிதைகள்
புல்லாங்குழல்
கருணாகரசு
நகர்ந்து கொண்டே இருப்பது
காலம் மட்டும் அல்ல
அந்த பெரியவரின்
கால்களும் தான்!
அந்த வட்டாரத்தில்
எந்த திருவிழாவிலும்
அவரைப் பார்க்கலாம்
ஒரு மரக் கழியிலேயே
தொங்குகின்றன – அவரின்
மொத்த மூலதனமும்
அவை
ஊசலாடியப் படியே இருக்கும்
அவர் வருமானத்தைப் போல!
ஆனால்
அறுந்து விழுவதேயில்லை
அவர் தன்மானத்தை போல!
ஒட்டிய கன்னம்
உடகுழி கண்கள்
வறண்ட உதடு
தேய்ந்த பாதம்
காய்ந்த கைகள் – என
வாழ்க்கை இவருக்குள்
வாசிப்பதென்னவோ…
சோக சுரம் தான்
ஆனால்
பலர் வாசிக்க
இவர் விற்பதென்னவோ
புல்லாங்குழல்
பாலமுருகன்
மூங்கில் தேகங்களில்
அக்கினிச் சுவடுகள்
புல்லாங்குழல்!
காடுகளில் மூங்கில் தீமூட்டும் – நம்
காதுகளில் இசையெனும்
இன்பத் தேனூட்டும்
புல்லாங்குழல்!
வெறும் காற்றில்
சுரமேற்றும் விஞ்ஞானக் குழல்
புல்லாங்குழல்!
துளைபட்ட மூங்கில்
தான்பட்ட வலியை
சங்கீதமாய்ச் சொல்லுகிறது
புல்லாங்குழல்!
எண்சான் உடம்பில் ஆறறிவு
ஒரு சாண் உடம்பில் ஏழறிவு
புல்லாங்குழல்!
சத்தம் சரணடைந்து
சங்கீதம்
நங்கூரம் பாய்ச்சுமிடம்
புல்லாங்குழல்!
கருணையாக
வருடி
கம்பீரமாக கர்ஜிக்கும்
புல்லாங்குழல்!
மங்களம் குழைந்து – வாசிப்போர்
மதிநுட்பம் காட்டும்
புல்லாங்குழல்!
பக்குவப் பாசுரங்கள்
திக்கெட்டும்
தேரோட்டும்
புல்லாங்குழல்!
தவிப்பின் தகிப்பை
தவிடு பொடியாக்கிவிடும்
புல்லாங்குழல்!
நிசப்தங்கள்
மீட்டும்
சகாப்தங்கள்
புல்லாங்குழல்!
கோவிந்தராசு
மூங்கிலுக்குள் புகுந்த
மூச்சுக்காற்று
முனங்கும் சத்தமெல்லாம்
மெல்லிசை! நல்லிசை! இன்னிசை!
ஓட்டை மூங்கிலுக்குள்
உட்புகுந்து காற்று
எழுப்பும் ஓசைக்கு
ஏழுலகும் தலையாட்டும்!
வெட்டித் துண்டுகளாக்கி
நெருப்பிட்டுச் சுட்டு
வட்டவட்டத் துளைகளிட்டு
வணிகத்திற்கு வந்தபின்…
இதோ
மனிதர்களைப் பார்த்தும் பேசுகிறது – ஒரு
மரத்துண்டு!
இசையால் வசமாகா மனமில்லை
அன்று… இடைக்குலத்தில்
எனைக்கொண்டு
மாடுகளையும் மயங்கவைத்தான்
மாயன் கண்ணன்
கள்ளுரும் பூமரங்கள் – அந்தக்
கானகச் சோலையிலே
முள்ளுப் புதர்ச்செடிபோல் – வளரும்
புல்லினம் என்னினமே!
கோதையின் உடனிப்பான் – அந்தக்
கோபியர் மனதிருப்பான்
கோகுலக் கண்ணனவன்-பொற்க்
கரங்களில் தவழ்பவன் நான்!
புலரும் பொழுது காட்ட – இனிய
பூபாளம் நானிசைப்பேன்
வளரும் செடிகொடியும்- ஒலி
வரும்திசை நோக்கிநிற்கும்!
புன்னகை புரியுமுங்கள்
பூவிதழ் முத்தங்களால் – எழும்
என்நகைச் சத்தங்களே
இசை என்பதறிவீரோ!
புகையூதும் இதழ்களிலே – இனிப்
புல்லாங்குழல் எடுப்பீர்
பகைனெபதில்லா தொழியும் – கொடும்
பசியும் பிணியும் அழியும்!
கூவிடும் கடல்லையைக் – கொஞ்சம்
கூப்பிட்டு அருகழைத்து
காவிய ஒலியெழுப்பி – அதன்
கடுஞ்சினம் குறையுங்களேன்!
தீவிரவாதி என்ற – அந்தத்
தரிகெட்ட தருக்களின் முன்
ஓவிய ஒலியெழுப்பி - வன்மை
ஒடுங்கிடச் செய்யுங்களேன்!
இல்லாமை விட்டொழிய – உயிர்
எல்லாமே நலம்வாழ
புல்லாங்குழல் இசையைக் – கேட்பீர்
புவிவாழ்ச் செல்வங்களே!
Filed under: கவிதை,நிகழ்வு,போட்டிக் கவிதை
all are very nice poem. i congrates to kavimalai groups . thank u