கவிமாலை பற்றி

ஒரு கவிதைப்பயணம்

கடற்கரைச்சாலை கவிமாலை – 100

(26.06.2000 – 27.09.2008)

தாய்மொழித் தமிழை ஆட்சி மொழியாக வைத்து அழகு பார்க்கும் சிங்கப்பூர்த் திருநாட்டில், தமிழ் வாழ; தமிழ் வளர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிங்கப்பூர் அரசு அதற்கு வேராகவும் நீராகவும் இருந்து உதவி வருகின்றது.

தமிழர்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் வாழும் மொழியாகத் தமிழை வைத்திருக்க சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கழைக் கழகங்கள் பல்வேறு போட்டிகள் நடத்தியும், பல்வேறு வழிகளில் மாணவர்களை ஈடுபடுத்தியும் தமிழ் மீதான ஈடுபாட்டை வளர்த்து வருகின்றன; நாளும் தூண்டி வருகின்றன.

ஒரு மொழி அழகாய் இருப்பது கவிதையில்தான் என்பதை நன்கு உணர்ந்து தமிழ்மொழியில் கவிதை ஆற்றலை வளர்க்கவும், தமிழ்க்கவிதை வளரவும், தமிழ்க் கவிஞர்கள் உருவாகவும் எண்ணித் தொடங்கப்பட்டதுதான் கடற்கரைச்சாலைக் கவிமாலை.

பிச்சினிக்காடு இளங்கோவின் நான்கு மாத முயற்சியில் சிங்கப்பூர் கம்போங்கிளாம் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் திரு.மு.சுப்பிரமணியம் அவர்களின் ஆதரவோடும், கம்போங்கிளாம் சமூகமன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஒத்துழைப்போடும் 24.06.2000இல் தொடங்கப் பட்டது.

தொடங்கிய நாள் கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாள். ஒரு கவிஞரின் பிறந்த நாளில் கவிமாலை தொடங்கப் பட்டது மிகவும் பொருத்தமாகவும், பெருமையாகவும் அமைந்துவிட்டது. அன்று தொடங்கி கவிமாலை தொய்வின்றி நடைபெற்று வருகிறது. கவிமாலை இயக்கத்தை பிச்சினிக்காடு இளங்கோ தொடங்கியிருந்தாலும் அதற்கான முயற்சியை எடுத்திருந்தாலும் கவிஞர்கள் கூடி கவிதைக்காக் கவிஞர்கள் நடத்தும் அமைப்பாக அதை மாற்றினார்.

அவர் ஒரு உடன்படுசொல்லாகவே செயல்பட்டார்;

ஆம்! ஓர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்;

கவிமாலையின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பணியிலும், அறிவுரை கூறும் இடத்திலும் ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால், புதுமைத்தேனீ மா.அன்பழகன் ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள்.

முதல் கவிமாலையிலேயே முழுச் சுதந்திரத்தோடு கவிஞர்கள் கலந்து கொண்டார்கள்; கருத்துக்களை பரிமாறினார்கள். அதனால்தான் இன்றுவரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கவிமாலை தொடங்கப்பட்ட அன்று சிங்கப்பூரின் மூத்த, இளைய கவிஞர்கள் 26 பேர் கலந்து கொண்டு இந்தத் தொலைதூரக் கவிப்பயணத்தைத் தொடங்கி வைத்தார்கள்.

அன்று முதல் 99 மாதங்களாக ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் கடைசி சனிக்கிழமை மாலை கவிமாலையாக மலர்ந்தது. கலந்து கொள்ளும் கவிஞர்கள், தாங்கள் வடித்த, படித்த தங்களுக்குப் பிடித்த கவிதைகளை அரங்கேற்றுவார்கள்.

மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனகவிதை இன்னும் எத்தனை வகைக் கவிதைகள் வந்தாலும் எந்த வேறுபாடும் இன்றிக் கவிதை வளரவும், அதன் வழி தமிழ் வளரவும்; வாழவும் கவிமாலை பயன்பட்டு வருகிறது. “இதுதான் கவிதை” – என்ற தேக்கநிலை இல்லாமல் “எது கவிதை: என்ற தேடலோடு கவிமாலை இயங்கி வருகிறது.

கவிஞர்களின் கவிதை முன்னேற்றத்திற்குத் தடமாக தளமாக; நல்ல களமாகக் கவிமாலை அமைந்தது. ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால் அவர்கள் தொடர்ந்து நடத்திய “யாப்பிலக்கண வகுப்பு” பலரையும் மரபுக்கவிதை எழுதும் கவிஞர்களாக உருவாக்கியது.

ஒவ்வொரு மாதத்திலும் பிறந்த மறைந்த கவிஞர்கள் பற்றிய உரை நிகழும் தகவல்கள் பரிமாறப்படும் பெருமைகள் பேசப்படும்; வெளிநாட்டுக் கவிஞர்கள் பற்றிய அறிமுக உரையும் இடம்பெற்றது.

கவிமாலை நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்தும், பிற நாட்டிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் கவிஞர்கள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருக்கிறார்கள்; கவிமாலையை பாராட்டியிருக்கிறார்கள்; கவிதைப் பாடமும் நடத்தி யிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவிலிருந்து சபா ராஜேந்திரன், முருகபூபதி, கனடாவிலிருந்து சேரன், முனைவர் அனந்த நாராயணன், மலேசியாவிலிருந்து எழுத்தாளார் சை.பீர்முகம்மது, கவிஞர் தீப்பொறி பொன்னுச்சாமி, புதுவையிலிருந்து முனைவர் நா.இளங்கோ, மும்பையிலிருந்து இந்திய பேனா நட்புக்கழகத்தின் தலைவர் ஞானசேகரன்…

தமிழகத்திலிருந்து கவிக்கோ அப்துல்ரகுமான், ஈரோடு தமிழன்பன், முனைவர் மறைமலை இலக்குவன், நாஞ்சில் சம்பத், இளசை சுந்தரம், நாகர் ரூமி, சாகித்ய அகாதெமி குழுத்தலைவர் – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பாலா, மணவை முஸ்தபா, கவிஞர் செவ்வியன், உதயை மு.வீரையன், கவிதை உறவு இதழ் ஆசிரியர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன், தஞ்சை கூத்தரசன், தஞ்சைவாணன், கண்ணியம் இதழாசிரியர் குலோத்துங்கன், அமுதன் அடிகள், வா.மு.சே.ஆண்டவர், வழக்கறிஞர்கள் திருமதி.அ.அருள்மொழி, பட்டுக்கோட்டை மதியழகன், வைகோவின் உதவியாளர் அருணகிரி, ஆசிரியர் மா.சோமநாதன், கவிஞர்கள் தமிலேந்தி கருமலைக் தமிழாழன், அய்யப்பமாதவன் ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
கவிமாலைக் கவிஞர்கள் திருமதி தவமணி வேலாயுதம், திரு.வை.சுதர்மன், சி.கருணாகரசு, ந.வீ.விசயபாரதி, கோ.அருண்முல்லை, பட்டுக்கோட்டை தமிழ்நதி, தமிழ்க்கிறுக்கன், பிச்சினிகாடு இளங்கோ ஆகியோரின் நூல்களும் முத்துக்குமரனின் பக்தி வெளியீடான “தெய்வீகம்” என்ற ஒலி வட்டும் கவிமாலை சார்பாக வெளியிடப்பட்டன.

ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால், கவிஞர் மா.அன்பழகன், இனியதாசன், நூர்ஜஹான் சுலைமான், பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோரின் நூல் வெளியீட்டு விழாக்களுக்கு முழு ஆதரவு தந்தும், பிற நிகழ்ச்சிகளுக்கு உதவியாக இருந்தும் சிங்கப்பூர் இலக்கிய வளர்ச்சிக்குக் கவிமாலை தன் கடமைச் செய்திருக்கிறது.

ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பாலின் “தண்ணீர்” கவிதை 2000ஆம் ஆண்டு (ஜெர்மனி நாட்டில் ஹனோவர் நகரில் நடைபெற்ற உலகப்பெருங்காட்சியில் ( 2000) சிங்கப்பூரின் கவிதையாக இடம்பெற்தை பாராட்டி – பாராட்டு விழா நடத்தப்பட்டது. கவிஞர்கள் அனைவரும் பங்கேற்ற கவிதை வாழ்தரங்கம் இடம்பெற்றது. தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் திரு.வை.திருநாவுக்கரசு, தமிழர் பேரவையின் தலைவர் MDIS நிறுவனத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஆர்.தேவேந்திரன் PBM, ஈரோடு தமிழன்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கவிமாலையின் சார்பாக ஒன்பது பவுனில் பொன்மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது; அதுமட்டுமல்ல, அது ஒரு இலக்கிய வரலாறு.

சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்குப் பணியாற்றிய சிறந்த படைப்பாளர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பு செய்ய முடிவெடுத்து “கவிமாலை இலக்கியக் கணையாழி விருது” வழங்கப்பட்டு வருகிறது.

2003இல் திரு.பி.கிருஷ்ணன் (புதுமைதாசன்)
2004ல் திரு வெண்பாசிற்பி இக்குவனம்
2005ல் திரு ஜே.எம்.சாலி
2006ல் சிங்கப்பூர் சித்தார்த்தன் திரு பா.கேசவன்
2007ல் திரு பி.பி.காந்தம் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கணையாழி விழாவில் கணையாழியும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். 2007இல் பி.பி.காந்தம் அவர்களுக்கு முதன் முதலாக 1000வெள்ளியும் வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு விருது பெற்ற எழுத்தாளர், நடப்பாண்டில் விருது பெறும் எழுத்தாளருக்கு கணையாழியை அணிவிப்பார்.

ஐந்தாண்டுக்கும் மேலாக கம்போங்கிளாம் சமூக மன்றத்தில் நடைபெற்ற கவிமாலை தற்பொழுது ஜாலன்புசார் சமூக மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சிங்கப்பூர் நாணய மாற்றுச் சங்கத்தின் தலைவர், புதிய நிலா ஆசிரியர் திரு.ஜஹாங்கீர் அவர்களின் ஆதரவும் ஆர்வமும் ஆகும்.

அவ்வப்போது கம்போங்கிளாம் சமூக மன்றத்தில் அதன் புதிய தலைவர் திரு தாஸ் உள்ளிட்ட இந்திய நற்பணிச் செயற்குழுவின் ஆதரவில் நடைபெறுவதுண்டு. கவிமாலைக் கவிஞர்கள் பூலாவ் உபின், செயின் ஜான்ஸ், செந்தோசா, பூமலை, கிழக்குக்கடற்கரைப் பூங்கா ஆகிய இடங்களுக்குக் கவிதைச் சுற்றுலா சென்று அங்கே கவிதை எழுதி, பாடி, படித்து, பட்டிமன்றம், நாடகம், வினாடிவினா, பாட்டுக்குப்பாட்டு, கபடிப்போட்டி, போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளில் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொண்டு “கவிமாலை” ஒரு குடும்பம் என்ற உணர்வு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஓர் உணவு தயாரிக்கப்பட்டு அங்கே பரிமாறப்பட்டது.

2004ல் சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக்கழகத்தின் துணை இயக்குனர் திரு.அருண்மகிழ்நன் தலைமையில் தேசிய நூலக வாரியத்தின் சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற “வாசிப்பை நேசிப்போம்” என்ற 24 மணி நேர வாசிப்பில் ஒரு மணி நேரத்தை கவிமாலையும் எடுத்துக்கொண்டு கவிதை வாசித்து தன் பங்கை ஆற்றியிருக்கிறது.

கிழக்கு கடற்கரைச்சாலையில் “கவிராத்திரி” நடத்தப்பட்டது கவிராத்திரியில் அனைத்துக் கவிஞர்களும் கலந்துகொண்ட கவியரங்கம் நடைபெற்றது. ஒரு சுற்று முடியும் பொழுது விடியவும் சரியாக இருந்தது.

கவிமாலைக்கு வந்து கவிதை எழுதி, கவிமாலையில் பரிசு பெற்று, தொடர்ந்து தேசிய அளவில் பரிசு பெற்றவர்களும் உண்டு. 2007இல் தங்கப் பேனா முனை விருது பெற்ற கவிஞர்கள் ந.வீ.சத்தியமூர்த்தி, மலர்விழி இளங்கோவன் ஆகியோருக்குப் பாரட்டு விழா நடத்தி நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

ஒலி 96.8இல் பணியாற்றிச் சிறப்புப் பரிசுகள் பெற்ற ஒலிக் கலைஞா பி.என்.பாலசுப்பிரமணியம், நவரசக் கலைஞர் ரெ.சோமசுந்தரம் ஆகியோரைக் கவிமாலை சிறப்புச் செய்து பாராட்டியிருக்கிறது.

“தை மாதம்“ தமிழாண்டின் முதல் மாதம் என அறிவித்த தமிழக முதல்வர் கலைஞரைப் பாராட்டி, சிங்கப்பூர்த் தமிழர்களின் கையெழுத்து வாங்கி தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டது.

கவிமாலைக் கவிஞர்கள் மெக்பர்சன், புக்கிட் பாஞ்சாங், தாமன் ஜீரோங், புக்கிட் தீமா, பெக்கியேயு தாம்சன் சமூக மன்றங்களில் கலந்து கொண்டு கவியரங்கம் நடத்தியிருக்கிறார்கள்.

• மாதம்தோறும் தமிழ்முரசு நாளேட்டிலும், ஒலி 96.8 வானொலியும் கவிமாலை நிகழ்வு பற்றிய செய்தி தொடர்ந்து இடம்பெறுவதற்குக் கவிமாலை தன் நன்றியைத் தெரிவிக்கிறது.

”கவிமாலைக் கணையாழி இலக்கிய விருது” நிகழ்வு நடந்து முடியும்போதே விருது பெற்றவரின் நேர்காணலுடன் செய்தியையும் ஒலிபரப்பச் செய்து அவ்விருதின் சிறப்பினை சிங்கப்பூரில் மட்ட்டுமின்றி உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளிலும் ஒலி பரப்பி பெருமைப்படுத்தும் ஒலி96.8இன் செய்திப்பிரிவுக்கும், கவிமாலை நிகழ்வுகளின் சிறப்பு விழாக்களை புகைப்படத்துடன் செய்தியாக வெளியிட்டு சிறந்த ஆதரவு தரும், மலேசியாவின் தமிழ் நேசனுக்கும் தமிழகத்தின் “தினமலர்” நாளேட்டில் தொடர்ந்து கவிமாலைச் செய்திகள் வெளிவர உறுதுணையாக இருக்கும் சிங்கப்பூரின் தினமலர் செய்தியாளர் “தமிழ்மனம்” திரு.வெ.புருஷோத்தமன் அவர்களுக்கும் கவிமாலை நூறாவது நிகழ்வையொட்டி கவிமாலையின் இயக்கம் பற்றியும் கவிதை இலக்கியம் சார்ந்த அதன் செயற்பாடுகள் பற்றியும் ஆழ்ந்த – அறிவார்ந்த ஆய்வினைச் செய்துவரும் முனைவர் ஸ்ரீலட்சுமி அவர்களுக்கும் கவிமாலை தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஏழாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற கவிமாலையில் மாதம்தோறும் பரிசுகள் வழங்கிய தமிழ் நெஞ்சங்களுக்கும், கணையாழி விருது வழங்கி உதவிய புரவலர்களுக்கும், கவிஞர்களுக்கும், வணிகப் பெருமக்களுக்கும், நண்பர்களுக்கும் கவிமாலையின் நன்றி நிலையானது.

2008இலிருந்து ஒவ்வொரு மாதமும் 90 வெள்ளி வீதம் தொடர்ந்து வழங்கி வரும் நல்ல மனம் படைத்த புரவலர் ஸ்ரீ விநாயகா ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் ஜோதி.மாணிக்கவாசகம் அவர்களுக்கும் அறிமுகப்படுத்திய புக்கிட் தீமா சமூக மன்றத் தலைவர் திரு அருணாச்சலம் அவர்களுக்கும் கவிதை நெஞ்சத்தால் கவிமாலை நன்றி கூறுகிறது.

கவிமாலை இன்றைக்கு தீராநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. கவிதை நதியை வளப்படுத்திய கவிஞர்களும் உண்டு; வளம் பெற்ற கவிஞர்களும் உண்டு.

நல்ல தமிழ்க் கவிதையை, நல்ல தமிழ்க் கவிஞர்களை எதிர்காலம் பெறவும், பெற்றெடுக்கவும் கவிமாலை தொடர்கிறது.

எந்த இலக்கிய அமைப்புகளும் தமிழ்மொழி நிகழ்வுக்கும் கவிமாலை இடையூறாக இருந்த்தில்லை. முக்கனிக்கும் அப்பால் இதயம் கவர்ந்த கவிஞர் உதுமான் கனியின் மறைவுக்கு, தமிழ் முரசில் அரைப்பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. புதுமைத்தேனீ அன்பழகனின் 60ஆவது வயதில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டையொட்டி தமிழ்முரசில் ஒரு பக்க விளம்பரம் தந்து வாழ்த்தியது.

பிச்சினிக்காடு இளங்கோ சென்னை சென்றதால் 2008 ஏப்ரலில் இருந்துக கவிஞர்கள் ந.வீ.சத்தியமூர்த்தி, ந.வீ.விசயபாரதி கவிமாலையைத் தொய்வின்றி, இன்னும் சிறப்பாக நடத்திச் செல்வது பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியது.

• கவிமாலையின் வெற்றி ஒவ்வொரு கவிஞருக்கும் உரியது. ஒவ்வொரு கவிஞரும் உழைத்தது;

• கவிமாலையின் புகழ் ஒவ்வொரு கவிஞருக்கும் உரியது. ஒவ்வொரு கவிஞரும் வழங்கியது;

• கவிதையால் இணைந்து கவிதையை வளர்ப்பதே கவிமாலையின் நோக்கம்.

• கவிமாலை, கவிஞர்களால், கவிதைக்காக கவிஞர்களே நடத்தும் இயக்கம்;

• இதயமாக இருந்து இயங்குவதும் இயக்குவதும் கவிஞர்கள்.

கடற்கரைச்சாலைக் கவிமாலை என்பது சிங்கப்பூரில் ஓர் இயக்கம். ஓர் அமைப்பு. ஒரு குடும்பம்.

கவிதையாய் வாழ்வோம்!

கடற்கரைச்சாலை கவிமாலை
சிங்கப்பூர்

***

3 பதில்கள்

  1. தங்களின் தமிழ்த்தொண்டு மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன் நானும் ஒரு கவிமாலை வருகையாளன் என்ற முறையில். கடந்த காலத்தில் நான் கவிதை பாடி பரிசு பெற்றிருக்கிறேன். பல்வேறு காரணங்களால் வர முடியாமல் போவதுண்டு. இத்தளம் அந்தக் குறையைத் தீர்த்து வைக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து உங்கள படைப்புகளைப் பதிவு செய்யுங்கள். அதே சமயம் வாசகர்கள் தங்கள் படைப்புகளை இத்தளத்தில் பதிவு செய்ய முடியுமா என்று தெரியவில்லை. அப்படி ஒரு வசதி இருந்தால் சிங்கப்பூர்த் தமிழர்களோடு உலகத் தமிழர்களும் கைகோர்க்கும் நிலை ஏற்படும். வாழ்க உங்கள் தமிழ்க்கவிதைத் தொண்டு. நிறைய புதுக்கவிஞர்களை உருவாக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

  2. கறுப்புக்குரல்
    ஒலிக்கத் தொடங்கியது காண்
    வெள்ளை ஆதிக்கத்தில்
    கறுப்புக்குரல்
    ஒலிக்கத் தொடங்கியது காண்
    கறுப்புக்குரல்
    உலகமெங்கும் ஒலிக்கத் தொடங்கும் காண்
    கறுப்புக்குரல்
    என்னவோ இன்னும்
    ஓலக்குரலாகவே விடிந்து கொண்டிருக்கும்
    அக்கரைச் சீமையில் (இலங்கை) மட்டும்
    நம்பிக்கை கரைகிறது
    நாலாந்தர அரசியல்வாதிகளால்..
    என்று தணியும் பகை வேட்கை அங்கு
    அன்று முரசொலிப்போம் என்று
    வாளாவிருக்கும் தமிழர்களே
    ஒன்று கூடுங்கள் இந்த இனம்
    அழிவதற்குள்…

  3. அன்புடையீர் வணக்கம்,

    எழுதுபவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கான அடையாளம் பிரபல்யம் பூசிக் கொண்ட பின்பே உலகின் விழி அசைந்து திறக்கிறது; அவர்களை யாரென்று பார்க்க.. படிக்க.. இன்ன பிற அத்தனையும். அப்படிப் பட்ட நிலையில், அவர்களை கொண்டு போய் உலகின் முன் சேர்க்கும் உங்களை போன்றோரின் பணி பெரும் சிறப்பிற்கும் பெருமைக்குமுரியது.

    தொடர்ந்து செயல் படுங்கள்; உங்களை பற்றி யாரேனும் பேசவில்லையென்றாலும், உங்களால் பிற யாரையோ ஒருவரை பற்றி ஓர்தினம் உலகமும் வரலாறும் பேசும்.

    பெருத்த நன்றிகளும் கைகூப்பும் உண்டாகட்டும் உறவுகளே.

    வித்யாசாகர்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.